×

23,179 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்கம்

ஊட்டி :  நீலகிரியில் 23 ஆயிரம் முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமினை துவக்கி வைத்து வனத்துறை அமைச்சரும் தடுப்பூசி செலுத்தி கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் துவக்க விழா குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்று துவக்கி வைத்தார். பின்னர் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயுள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் முகாம் துவக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தவணை செலுத்தி கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் 4457 மருத்துவ பணியாளர்கள், 7083 முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர் 11,639 நபர்கள் என மொத்தம் 23,179 பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 469 நபர்களுக்கு முதல் தவணையும், 5 லட்சத்து 07 ஆயிரத்து 834 பேருக்கு இரண்டாவது தவணை என மொத்தம் 10 லட்சத்து 40 ஆயிரத்து 303 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தகுதியான நபர்கள் அனைவரும் தங்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டு, சார்ந்தவர்களையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தொற்று இல்லாத நீலகிரியை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதேபோல் ஊட்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள், தீயணைப்புத்துறையினர், காவல்துறையினருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கப்பட்டன….

The post 23,179 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் வீசிய பலத்த காற்றால் 1,500 வாழை மரங்கள் சேதம்..!!